மீட்டர் பெட்டியை மாற்றியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
குன்றத்தூர்: குன்றத்தூரில் மின்சார மீட்டர் பெட்டியை மாற்றியபோது, மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், ராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜான்பால்(23). இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(21) என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜான்பால் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முனுசாமி என்பவரின் பழுதடைந்த வீட்டில் கான்கிரீட் வேலைகள் நடைபெற்று வந்ததால், அதில் தளம் போடுவதற்காக தரை தளத்தில் உள்ள மின்சார மீட்டர் பெட்டியை வேறு ஒரு இடத்தில் மாற்றி வைக்கும் பணியில் ஜான்பால் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஜான்பால் கை மீது மின்சாரம் பட்டதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜான்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் இறந்த ஜான்பால் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.