நில அளவை செய்து தரக்கோரி திருநங்கைகள் சமைக்கும் போராட்டம்: செங்கல்பட்டில் பரபரப்பு
செங்கல்பட்டு,ஆக.15: செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 32 திருநங்கைகளுக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஓழலூர் கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பல்லாவாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் அவரது தலைமையில் பட்டா வழங்கப்பட்டது. முதல்வர் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பட்டாவில் குழப்பம் இருப்பதாகவும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நில அளவை செய்துதரவில்லை எனவும் கூறி கடந்த 9ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே செங்கல்பட்டு-மதுராந்தகம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் முன்னிலையில் செங்கல்பட்டு வட்டாட்சியர் ஆறுமுகம் பேசி 13ம் தேதி புதன்கிழமை உங்களுக்கு ஒதுக்கிய இடத்தை நில அளவை செய்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு சென்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீண்டும் 2வது முறையாக பாத்திர பண்டங்களை கொண்டு வந்து எங்களுக்கு முடிவு தெரியவில்லை என்றால் இங்கேயே சமைத்து சாப்பிட்டு இங்கேயே தங்கப்போவதாக சமையல் செய்து அங்கேயே அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ஆறுமுகம் மீண்டும் வருகிற புதன்கிழமை 20ம்தேதி நில அளவை செய்துதரதருவதாக ஊறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு புறப்பட்டு சென்றனர்.