நெம்மேலி இருளர் குடியிருப்பையொட்டி மலை போல் குவிந்த மண் அகற்றம்
மாமல்லபுரம், செப்.14: தினகரன் செய்தி எதிரொலியாக நெம்மேலி இருளர் குடியிருப்பையொட்டி மலைபோல் குவித்து வைத்திருந்த மண் அகற்றப்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி ஊராட்சி உள்ளது. இங்கு, ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிமா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பழங்குடி இருளர்கள் தினமும் கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். பழங்குடி இருளர்கள் வீடுகளையொட்டி தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. மேலும், கட்டுமான பணியை மேற்கொள்ள கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ராட்சத பள்ளங்கள் தோண்டி அந்த மண்ணை இருளர் வீடுகளுக்கு அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் கனமழை பெய்தது. இதனால், இருளர் வீடுகளையொட்டி மலைபோல் குவித்து வைத்திருந்த மண் மழையில் சரிந்து அங்குள்ள மதில் சுவர் உடைந்து 8க்கும் மேற்பட்ட இருளர் வீடுகளை சுற்றியும், வீட்டிற்குள்ளும் சேறும் சகதியுமாக மழைநீர் புகுந்தது. இதனால், சமையல் அடுப்பு, தலையணை, பாய், உடுத்தும் துணி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் சேதமடைந்தது. இதனால், இருளர் மக்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான், சமூக ஆர்வலர் ஏசுபாதம், தமிழ்நாடு அரசின் ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பாலாஜி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்து இருளர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொட்டப்பட்டிருந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தனியார் கட்டுமான நிறுவனத்தினர் மலை போல் குவித்து வைத்திருந்தை மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் போர்க்கால அடிப்படையில் அகற்றினர். இதையடுத்து, இருளர் சமுதாய மக்கள் திருப்போரூர் தாசில்தார் சரவணன், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.