காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்திற்கு தனி வரிசை
காஞ்சிபுரம், செப்.14: காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பகதர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் கோயிலுக்கு வருகின்றனர். இதன் காரணமாக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்கள் வருகையாள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 2 முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே, உள்ளூர் பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, காமட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், உள்ளூர் பக்தர்கள் சாமி தரசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கார்யம் சுந்தரேசன் கூறுகையில்; `உள்ளூர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அம்மனை தரிசிக்க தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய தனி வரிசையில் செல்ல விரும்பினால், அவர்களுடைய ஆதார் கார்டு அசல் அல்லது அதன் நகலை காண்பிக்க வேண்டும். தவறினால், பொது வரிசையில் தான் அனுமதிக்கப்படுவர்’ என்றார்.