மறைமலைநகர் அருகே காப்புக்காடு பகுதியில் குவியல் குவியலாக கொட்டப்படும் காலாவதியான மருந்து, மாத்திரைகள்
செங்கல்பட்டு, ஆக.14: மறைமலைநகர் அருகே குவியல் குவியலாக மர்ம நபர்களால் கொட்டப்படும் காலாவதியான மருந்து, மாத்திரைகளால் விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மர்ம நபர்கள் மீது வனத்துறை நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மறைமலைநகர் அடுத்த கருநிலம் கொண்டமங்கலம் - அனுமந்தபுரம் சாலையில் ஏரி பகுதியில் இருபுறமும் காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இந்த காப்புக்காட்டில் மயில், அரிய வகை பறவைகள், முயல், நரி மற்றும் குரங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த காப்புக்காட்டில் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருந்தகம், மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகளில் இருந்து காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள், குளுக்கோஸ் டியூப்கள் என மருத்துவம் சம்மந்தப்பட்ட பொருட்களை இந்த காப்புக்காட்டில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்த மருந்து மாத்திரைகள் மழையிலும் வெயிலும் கறைந்து பூமியில் கலந்து செடி, கொடி மற்றும் மரங்கள் பட்டுப்போவதோடு விஷத்தன்மை கொண்டதாக மாறுகிறது. மேலும், இங்கு வசிக்கும் விலங்குகள் இதனை உட்கொண்டால் அழியும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வனத்திலிருந்து ஒருசில விலங்குகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. எனவே, துறைசார்ந்த வனத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியை கண்காணித்து காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை கையும் களவுமாக பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.