செய்யூர் அடுத்த இசிஆர் சாலையில் நிழற்குடை இல்லாததால் பஸ் பயணிகள் தவிப்பு
செய்யூர், நவ.13: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை எல்லையம்மன் கோயில் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. செய்யூர், வடக்கு மற்றும் மேற்கு செய்யூர், புத்தூர், ஓதியூர், நைனார் குப்பம், முதலியார் குப்பம், இரும்பேடு, அம்மனூர் பகுதிகளில் இருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கென பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் மழையிலும் வெயிலிலும் நிற்க இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பயணிகள் நிற்கும் இடத்தின் சாலையோரம் கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் பயணிகள் சாலையில் ஆபத்தான முறையில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இப்பகுதியில் பெரும் விபத்து நேரிடும் அபாயம் உருவாகி உள்ளது. இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இப்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.