ஆடி மாத செவ்வாய்கிழமையையொட்டி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பெரும்புதூர், ஆக. 13: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். பெரும்புதூர் அடுத்து வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். கோயிலில் சுமார் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 7ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயிலில் ஆடி மாத செவ்வாய்கிழமையையொட்டி மூலவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகமும் நடந்தது. காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மூலவர் மலர் அலங்காரத்திலும், உற்சவர் கோடையாண்டவர் வெற்றிலை மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலில் குவிந்தனர். ‘அரோகரா, அரோகரா’ என்று பக்தி பரவசத்தில் கோஷமிட்டபடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பொங்கல், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் அறிவுரைப்படி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ், அறங்காலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.