கியூபா நாட்டின் இந்திய தூதர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்
மாமல்லபுரம், ஆக. 13: இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்து அங்குள்ள கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா என்பவர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக, அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே மல்லை தமிழ்ச்சங்கம் சாா்பில், தலைவர் மல்லை சி.ஏ.சத்யா தலைமையில், தமிழ்ச்சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், பல்லவ மன்னர்கள் கை வண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில், அர்ஜூன்ன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை கண்டு ரசித்து, அதன் முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
அவருக்கு, புராதன சின்னங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை மூத்த சுற்றுலா வழிகாட்டி சீனிவாசன் தெளிவாக விளக்கி கூறினார். அப்போது, கடற்கரை கோயில் உப்பு காற்றால் பாதிக்காத வகையில், எப்படி தொல்லியல் துறை நிர்வாகத்தால் பாதுகாக்கப்படுகிறது என கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து, கியூபா நாட்டின் தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகுலேரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘தமிழகத்தின் கலாச்சரம் மற்றும் மொழியை இங்குள்ள பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர்’. இவர்களது, வாழ்வியல் முறை எனக்கு பிடித்துள்ளது. தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது, என்றார்.