காஞ்சிபுரத்தில் இரு வழித்தடங்களில் நகர பேருந்து சேவை; எழிலரசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், அக்.12: காஞ்சிபுரத்தில் இரு வழித்தடங்களில் நகர பேருந்து சேவையை எழிலரசன் எம்எல்ஏ கொடியசைத்து, தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காஞ்சிபுரத்தில் நகரப் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன், கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி காஞ்சிபுரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஆய்வுக்காக வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினியிடம் கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை ஏற்று துணை முதல்வரின் பரிந்துரையின்படியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவின்படியும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டை ரயில் நிலையம், டோல்கேட் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வரை ஒரு பேருந்தும், ஒலிமுகமதுபேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் - செவிலிமேடு வரை என இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகர பேருந்து சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகரப் பேருந்து சேவையை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பகுதி செயலாளர்கள் கே.திலகர், எஸ்.சந்துரு, அ.தசரதன், சு.வெங்கடேசன், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.