மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு வாரந்தோறும் திங்கள் கிழமை விடுமுறை: கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
மாமல்லபுரம், ஆக. 12: மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு வாரந்தோறும் திங்கள் விடுமுறை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ள நீளமான பாறை மீது 138 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது, 84 அடி உயரத்தில் 93 படிக்கட்டுகளுடன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1887ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வங்கக்கடலில், பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் படகுகள் இந்த வெளிச்சத்தை அறிந்து விலகிச் செல்லவும், கப்பல் மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த, கலங்கரை விளக்கம் ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த, கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான வருகின்றனர். இதனை, சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 25 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றிப் பார்க்க வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை என ஒன்றிய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.