கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
துரைப்பாக்கம், நவ.11: சென்னை மாநகராட்சி, 196வது வார்டு அதிமுக கவுன்சிலர் அலுவலகம் மற்றும் வார்டு அலுவலகம், கண்ணகி நகரில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த முனியா (50) என்பவரின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. கவுன்சிலர் அலுவலகம் வழியாக சென்றபோது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், திடீரென கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அலறியடித்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதில், அலுவலகத்தின் முன்பு இருந்த டியூப் லைட், மாநகராட்சி பலகை மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த கண்ணகி நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக வீசினர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.