இளைஞர்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதால் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக அமோக வெற்றி பெறும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
குன்றத்தூர், செப்.11: குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். குன்றத்தூர் சேக்கிழார் அரசுப் பள்ளியில் நேற்று இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 8.24 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் 7.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஐந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் 7,297 பேருக்கு 362.55 கோடி ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவர் வழங்கினார். தொடர்ந்து குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட பழைய அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக, புதிதாக 9 அடி உயரமுள்ள சுமார் 1500 கிலோ எடையுள்ள முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். அப்போது திடீரென மழை பொழியவே, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த இரண்டு தினங்களாக நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தேன். அவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று இந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழா அமைந்துள்ளது. அம்பேத்கர் இயற்றிய சட்டம் தான் இன்று இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. அம்பேத்கரின் கொள்கையும், தந்தை பெரியாரின் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. இரண்டுமே சமூக நீதியையும், சமத்துவத்தையும் பின்பற்றுவதாகும். அதனால் தான் அம்பேத்கரை தாடி இல்லாத பெரியார் என்றும், தந்தை பெரியாரை தாடி வைத்த அம்பேத்கர் என்றும் அழைத்தனர். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையே நல்லதொரு கருத்தியல் ஒற்றுமை இருந்தது.
தமிழகத்தில்தான் முதன்முதலில் கலைஞர் ஆட்சியில் சட்டக் கல்லூரியில் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. சமீபத்தில் கூட தமிழக முதல்வர் லண்டன் சென்றிருந்த போது, அங்கு அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை நேரடியாக சென்று பார்வையிட்டார். அதில் தந்தை பெரியாரின் புகைப்படம் இருக்கவே இதுதான் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று பெருமையாக கூறினார். அவ்வளவு சிறப்பு மிக்க அம்பேத்கர் உருவாக்கிய சட்டங்களை மாற்றியமைக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சித்து தங்களது மனு தர்மத்தை புகுத்த நினைக்கிறது. இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பல்வேறு துறைகளில் படித்து முன்னேறுவதற்கு அம்பேத்கர் வகுத்த சட்ட திட்டங்களே மிக முக்கிய காரணம். இந்தியாவில் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். இளைஞர்களின் பெருவாரியான ஆதரவு திமுகவிற்கு உள்ளது. அதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் எஸ்.டி.கருணாநிதி, சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் மணி, குன்றத்தூர் நகராட்சி தலைவர் சத்யமூர்த்தி, சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், சிக்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி வைதீஸ்வரன், பம்மல் மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.