வணிக வளாகம் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
சோழிங்கநல்லூர்,செப்.11: சென்னை மயிலாப்பூரில் உள்ள வணிக வளாகம் பகுதிகளில் நள்ளிரவில் போதை மாத்திரைகள் விற்று வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகம் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது, வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி வந்தனர். இதை பார்த்த போலீசார் 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(19) மற்றும் ரவிக்குமார்(19) என தெரியவந்தது. அவர்கள் போதை மாத்திரைகளை மொத்தமாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வரழைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.