சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
மதுராந்தகம், செப். 9: மதுராந்தகம் அருகே தாதங்குப்பம் கிராம மக்கள் சாலை அமைக்க கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் தாதங்குப்பம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திற்கு அப்பகுதி மக்கள் பக்கம் ஏரிக்கரை மீது உள்ள மண் பாதையில் சைக்கிள், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்தனர். இந்த ஏரிக்கரை மீது சாலை அமைக்க வேண்டும் என்று சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், தற்பொழுது தாதங்குப்பம் கிராமத்திற்கு பாக்கம் ஏரிக்கரை மீது கனிம வள நிதிலிருந்து சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தாதங்குப்பம் பகுதியை சேர்ந்த தனிநபர் வேலையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த தாதங்குப்பம் கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆய்வாளர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை பணி தடை இன்றி நடைபெற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.