சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
பெரும்புதூர், ஆக.9: சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினத்தை முன்னிட்டு பெரும்புதூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தியது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சார் ஆட்சியர் மிருணாளினி, பெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், சால்காம்ப் நிர்வாக இயக்குநர் அருள்பிரபு ஆகியோர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரும்புதூர் பேருந்து நிலையம் வரை சென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வாறு சாலையில் வாகனத்தை இயக்க வேண்டும். பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதை குறித்து நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.