ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காஞ்சிபுரம் மாநகரம் மேம்படுத்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம், ஆக.8: நாட்டின் முக்கிய நகரங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காஞ்சிபுரம் மாநகரத்தை தேர்வு செய்து மேம்படுத்தப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். நாட்டின் முக்கியமான நகரங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கடந்த 2015ம் ஆண்டில் ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது. இந்த, திட்டத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒன்றிய அரசு ரூ.500 கோடி, மாநில அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, மொத்தம் ரூ.1000 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்த, திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஏற்கனவே திண்டுக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், நாட்டில் புகழ்மிக்க நகரமான காஞ்சிபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை. காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற கோயில் நகரமாகவும், பட்டு நகரமாகவும், கலாச்சார நகரமாகவும், பாரம்பரிய நகரமாகவும், சென்னை பெருநகரின் துணை நகரமாகவும் விளங்கி வருகிறது. மேலும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் போன்ற கோயில்களை சுற்றிப் பார்க்கவும், பட்டுச் சேலை வாங்கவும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.
இத்தகைய புகழ் பெற்ற காஞ்சிபுரம் நகரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்து, நகரின் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1866ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே காஞ்சிபுரம் நகராட்சி உருவாக்கப்பட்டு அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம், 2 பெரிய மார்க்கெட், 500க்கும் மேற்பட்ட தெருக்கள், பட்டுச் சேலை வர்த்தகம், புகழ்பெற்ற கோயில்கள் போன்றவை பல ஆண்டுகளாக உள்ளன. தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு36.14 ச.கி.மீ பரப்பளவில் 51 வார்டுகளை கொண்டதாக உள்ளது. இங்கு சுமார் 2.31 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி விரிவாக்கத்தால் புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு, மிகப் பெரிய மாநகராட்சியாக மாறியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் நகரில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. எனவே, காஞ்சிபுரத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்தால் தரமான சாலை, பாரம்பரிய வடிவிலான மின்விளக்குகள், பயணிகள் தங்குவதற்கான வசதிகள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், நெரிசல் இல்லாத போக்குவரத்து, காஞ்சிபுரம் மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் பாலாறு குடிநீர், சுற்றுச்சூழல் மேலாண்மை, ஸ்மார்ட் உள்கட்டமைப்புகள், சிறந்த வேலை வாய்ப்புகள், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படுதல், சமூக தேவைகளுக்கு ஸ்மார்ட் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல், அடுக்குமாடி வாகன நிறுத்தம், மேம்பாலங்கள் போன்ற பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
மேலும் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வசதியும் கிடைக்கும் அதேபோல, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கும், திரவக் கழிவு மேலாண்மைக்கும் இந்த திட்டம் உதவும்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2வது பன்னாட்டு விமான நிலையமும், சென்னை மெட்ரோ ரயில் நிலையமும், சென்னை - காஞ்சிபுரம், - வேலூர் ரயில் திட்டத்திற்கு சர்வே பணிகளும் நடைபெறறு வருகிறது. இந்த, தருணத்தில் காஞ்சிபுரத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்து, நகரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் பிரதமருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.