காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன் ரூ.324 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குன்றத்தூர், டிச. 7: காஞ்சிபுரத்தில் ரூ.324 கோடி மதிப்பீட்டில் 770 படுக்கை வசதிகளுடன் பெரிய புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட மருத்துவ முகாம் நேற்று தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் கணினி மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமில் காஞ்சிபுரம் மாவட்டக்குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன், துணை சேர்மன் உமா மகேஸ்வரி வந்தேமாதரம், ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டு கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. கடந்த வாரம் வரை 634 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 9,89,518 பேர் பயனடைந்திருக்கிறார்கள். மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை 634 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் முகாம்களும் வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களில் நடத்தப்படும்.
மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் முழு உடற்பரிசோதனைகளுக்கு ரூ.20,000 வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000 வரை செலவாகும். ஆனால் கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடற்பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மிக முக்கியமான சேவையாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஒவ்வொரு முகாமிற்கும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. அமைப்புச் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சேவை செய்யப்படுவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு மிகச் சிறப்பாக புற்றுநோய் பாதிப்புகளுக்கு பெரிய அளவிலான தீர்வு என்ற வகையில் 770 படுக்கை வசதிகளுடன் ரூ.218 கோடி மதிப்பீட்டிலான கட்டிடமும், ரூ.106 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களுடன் சேர்த்து ஆக மொத்தம் ரூ.324 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் காரப்பேட்டை அருகே பெரிய புற்றுநோய் மருத்துவமனை கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப் பெரிய புற்றுநோய் மையமாக அமையவிருக்கிறது. இவ்வாறு கூறினார். நிகழ்வின்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி சாமிநாதன், உஷா நந்தினி எத்திராஜ், பாண்டுரங்கன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.