போலி ஆவணங்கள் தயாரித்து தமிழகத்தில் வசித்த இலங்கை ஆசாமி கைது
துரைப்பாக்கம், டிச. 7: இலங்கையை சேர்ந்த ஒருவர், சட்ட விரோதமாக, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வருவதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதியில் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த மல்லிகா ராகி ராஜேஸ்வரன் (53) என்பவரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 39 வருடங்களுக்கு முன், தமிழகத்திற்கு வந்த மல்லிகா ராகி ராஜேஸ்வரன், தமிழகத்தை சேர்ந்தவர் போல் அடையாள அட்டைகள், முகவரி சான்றுகள் போன்றவற்றை போலியாக தயாரித்துள்ளார். பின்னர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மேரி என்பவரை திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு, 3 மகள்கள் உள்ளனர். மனைவி மேரி உயிரிழந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு முதல், ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.