மெட்ரோ பணியின்போது ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
ஆலந்தூர், டிச.7: மாதவரம் - சிறுசேரி வழித்தட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, கீழ்கட்டளை பகுதியில் மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் தூண்கள் அமைக்கப்பட்டு, அதன்மீது கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழ்கட்டளை பஸ் நிறுத்தம் அருகே, நேற்று ராட்சத கிரேன் முலம் தளவாட பொருட்களை மேம்பாலத்தின் மீது ஏற்றியபோது, ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்பட்டதால், ஆபரேட்டரால் கிரேனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவ்வழியே எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று, மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். பின்னர், பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு, கிரேன் பழுது சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே போக்குவரத்து சீரானது.