காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை
காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 என நாட்கள் வெயில் சுட்டெரித்த நிலையில், திங்கட்கிழமை திடீரென கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செவ்வாய், புதன் கிழமைகளில் ஓரளவு மேகமூட்டமாக இருந்த நிலையில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரம் இரட்டை மண்டபம், ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டுத் தெரு, கீரைமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உலகளந்த பெருமாள் கோயில் எதிரில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறியதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், தாமல், கீழம்பி, பெரும்பாக்கம், விஷார், பரந்தூர், ராஜகுளம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.