திருப்போரூரில் சமூக நல கூடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
திருப்போரூர், ஆக.7: திருப்போரூரில் சமூக நல கூடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூர், கேளம்பாக்கம், மானாம்பதி, காயார், தாழம்பூர், கானத்தூர் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த, காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, நடைபெறும் வழக்கு விசாரணையின்போது, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சிறையில் இருந்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைப்பது காவல் துறையின் முக்கிய பணியாக உள்ளது.
நீதிமன்றத்திற்கு செல்வது காலதாமதம் ஏற்படுத்தும் ஒரு பணியாக இருந்ததால் திருப்போரூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள், காவல் துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம்தேதி திருப்போரூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய கண்ணகப்பட்டு சமுதாயக் கூட கட்டிடத்தில் தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த, நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்களேரி கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த நிலத்தை ஒட்டி வனத்துறை நிலம் இருப்பதால் அத்துறையிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், இதுவரை புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. தற்போது, 6 காவல் நிலையங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழக்குகள், திருப்போரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தினமும் நூற்றுக்கணக்கான வழக்காடிகளும், வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள், உட்காரக்கூட இடம் இல்லாமல் நாள் முழுக்க நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், நீதிமன்றத்தின் நுழைவு வாயிலை ஒட்டி போடப்பட்டிருந்த மதிற்சுவர் மழைநீர் வடிகால்வாய் பணியின்போது இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக முன்பக்க மதிற்சுவர் இன்றி பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஆகவே, திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை உறுதி செய்து, உரிய நிதி ஒதுக்கி அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நிரந்தர போலீஸ் பாதுகாப்பு தேவை
திருப்போரூர் நீதிமன்றம் ஓஎம்ஆர் சாலையிலேயே திறந்தவெளி சமுதாய கூடத்தில் அமைந்துள்ளதால், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு கொண்டு வரப்பட்ட கொலை வழக்கு குற்றவாளியை, எதிர் தரப்பினர் நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினர். ஆனால். காவல் துறையினர் இதை முன்னரே கண்டுபிடித்து திட்டம் தீட்டியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆகவே, நீதிமன்றத்திற்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.