10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது
சோழிங்கநல்லூர், டிச.6: பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், அண்ணாநகரில் கடந்த 2 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவனை நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. பெரம்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர், அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் கடந்த 2 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்தார். இவர், முறையாக மருத்துவம் படிக்காமல், சட்ட விரோதமாக மருத்துவமனை நடத்தி வருவதாக, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்கத்திற்கு புகார்கள் வந்தது.
அதன்பேரில், அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை பேராசிரியர் சுகுமாரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீதாராமன் மற்றும் அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம், அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வெங்கடேசன் என்பவர் மருத்துவம் படிக்காமல், சட்ட விரோதமாக மருத்துவமனை நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆயுர்வேத மற்றும் அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்து, அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். பின்னர் வெங்கடேசனை அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேசன், 10ம் வகுப்புகூட தேர்ச்சி பெறாதவர். கடைகளில் விற்கும் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாங்கி படித்துள்ளார். நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் வரும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை படித்துள்ளார். பின்னர் தேவைப்பட்டால் அதை வெட்டி பத்திரப்படுத்தி அதன்படி மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கி வந்துள்ளார். வண்ணாரப்பேட்டையில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அங்கு கைராசி மருத்துவர் வெங்கடேசன் என கேட்டால் தெரியாத ஆட்களே இல்லையாம். அண்ணாநகர் பகுதியில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் இது போன்ற நிறைய பில்டப் கொடுத்துள்ளார். மேலும், யூடியூப்களில் அலோபதி சிகிச்சை தொடர்பான வீடியோக்களை பார்த்து, என்னென்ன நோய்க்கு என்னென்ன மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும், என்பதை பார்த்து, அலோபதி மருத்துவமும் செய்துள்ளார். இவ்வாறு ேபாலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர் வெங்கடேசனை கைது செய்தனர்.