தாம்பரம் சானிடோரியத்தில் ரூ.115.38 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு
தாம்பரம், ஆக. 6: தாம்பரம் சானிடோரியத்தில் ரூ.115.38 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தாம்பரம் சானிடோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை வரும் 9ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் விழா மேடை அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு விழா மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இரண்டு லட்சம் சதுரடியில் ஏழு மாடிகள் கொண்ட மருத்துவமனை சுமார் ரூ.115 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில், 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் நலன் மற்றும் நீரிழிவு சிகிச்சை பிரிவு உள்ளன. சிடி ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மிகுந்த மாவட்ட மருத்துவமனையை வரும் 9ம் தேதி காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் திறந்துவைக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் சினேகா, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் காமராஜ், மண்டல குழு தலைவர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.