தும்பவனம் கால்வாய் பகுதியில் சாலையோர தடுப்புகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்
காஞ்சிபுரம்,டிச.5: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து தும்பவனம் கால்வாய் தொடங்குகிறது. ராகவேந்திரா நகர், போஸ்டல் காலனி, அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதி வழியாக வந்தவாசி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறு பாலம் வழியாக வேகவதி ஆற்றில் மழைநீர் கலக்கும் வகையில், இந்த கால்வாய் அமைந்துள்ளது. திருப்பருத்திக்குன்றம், கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், தும்பவனம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள், கோரை புற்கள் அதிகளவில் முளைத்து, புதர்மண்டி தூர்ந்த நிலையில் இருந்தது. எனவே, இது மழைக்காலம் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் செடிகொடி, கோரை புற்கள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டது. இந்நிலையில், சாலையையொட்டி கால்வாய் உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் ஒதுங்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் அதிக வெளிச்சம் இல்லாததால் பைக்கில் வருவோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு அருகில் உள்ள இந்த கால்வாய் பகுதியின் சாலையோரம் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.