கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் அகற்றம்
திருப்போரூர், டிச.4: கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையில் வழிந்தோடிய மழைநீர் மோட்டார் வைத்து, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கையால் அகற்றப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் சினேகா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். கடந்த இரு நாட்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள நகர், கனக பரமேஸ்வரன் நகர், அஜித்நகர், லட்சுமி அவென்யூ, ராஜேஸ்வரி நகர், சாமுண்டீஸ்வரி நகர், நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் தெருக்களில் மழைநீர் தேங்கியது.
அதேபோன்று, கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் உள்ள பெரியகுட்டையில் மழைநீர் தேங்கி முழுவதும் நிரம்பியதால் சாலையில் வெளியேறியது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதையடுத்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில், ஊராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், தையூர் மற்றும் கேளம்பாக்கம் இடையே வீராணம் கால்வாயில் இருந்து வெள்ள நீர் வெளியேறி ஓ.எம்.ஆர்.சாலையில் வழிந்தோடியது. இதனால் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற வாகனங்கள் ஓ.எம்.ஆர். சாலையில் ெமதுவாகச் சென்றன. தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மற்றும் ஊழியர்கள் வந்து சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய படூர் ஊராட்சியில் உள்ள ஈசா ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதன் காரணமாக படூரில் ஓ.எம்.ஆர். சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. படூர் ஊராட்சி சார்பில் வெள்ளநீர், மழை, புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றிம் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், ஒன்றிய ஆணையாளர் அரிபாஸ்கர் ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.