கவுன்சிலரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்த விவகாரம் செங்கல்பட்டு கலெக்டர், எஸ்பி பதில்தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.1: கட்டப்பஞ்சாயத்து செய்து கவுன்சிலரை ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர், மாவட்ட எஸ்பி பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியின் 6வது வார்டு கவுன்சிலரான வீரராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பனையூர் பெரியகுப்பம் மக்களுக்கும், பனையூர் சின்னகுப்பம் மக்களுக்கும் நீண்ட காலமாக பகை உள்ளது. பெரியகுப்பத்தைச் சேர்ந்த நான், கவுன்சிலர் என்ற முறையில் சின்னகுப்பத்தில் நடந்த சாலை சீர் செய்யும் பணியை பார்வையிட கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்றேன். இதை தெரிந்து எங்கள் ஊர் தலைவர்கள் நாகராஜ், முத்து, தினகரன், அரிதாஸ், குமாரவேல், சேகர், மனோகர் ஆகியோர் அங்கு வந்து என்னை பயங்கரமாக திட்டினர். என்னையும், என் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் ஊரை விட்டு வெளியேறி மரக்காணத்தில் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் 22ம் தேதி உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அப்போதும் என்னை கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை. ஊர் தலைவர்களின் இந்த செயல் சட்டவிரோதமாகும். இதுகுறித்து செய்யூர் போலீசில் புகார் செய்தேன்.
போலீஸ் விசாரணையில் ஊர் பஞ்சாயத்தில் எடுத்த முடிவை ஒன்றும் செய்ய முடியாது என்று நாகராஜ் உள்ளிட்டோர் கூறிவிட்டனர். போலீசாரும் அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கவுன்சிலர் பணியை மேற்கொள்ள வழிவகை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.முருகவேல் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கவுன்சிலருக்கே இந்த நிலையா என்று கேட்டதுடன், இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து கூட்டம், தங்களை உச்ச நீதிமன்றம் என்று நினைத்து செயல்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை நேரில் வரவழைக்க வேண்டும். இந்த மனு தொடர்பாக செங்கல்பட்டு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். ஊர் பஞ்சாயத்தார் என்று கூறப்படும் நாகராஜ், முத்து உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக வேண்டும். மனுதாரரான கவுன்சிலருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு முடிவு செய்யவேண்டும், என்று உத்தரவிட்டார்.