ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல்கள் கரை ஒதுங்கின: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுற்றுலாவில் இறந்த பரிதாபம்
மாமல்லபுரம்,அக்.1: மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகளின் உடல், 2 நாட்களுக்கு பிறகு கரை ஒதுங்கின. சென்னை பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு 2 நாட்களுக்கு முன் சென்றார். அங்கு, அனைவரும் கடலில் இறங்கி குளியல் போட்டுள்ளனர்.
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வெங்கடேசன் (37). அவரது, மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) மற்றும் ஹேமாவதி (37) ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து செயல்பட்டு ஹேமாவதியை மட்டும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராட்சத அலையில் சிக்கிய தந்தை, 2 மகள்கள் என 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர்களை மீட்க முடியவில்லை. பின்னர், சிறிது நேரத்தில் வெங்கடேசன் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமான சகோதரிகளான கார்த்திகா, துளசி இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மீட்க முடியவில்லை.
கடந்த 2 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று காலை சூளேரிக்காடு பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், சகோதரிகளின் உடல் சூளேரிக்காடு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அருகே அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த, மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.