மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது
மதுராந்தகம், ஆக. 11: மதுராந்தகம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் படிக்காமல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். மதுராந்தகம் அருகே கருங்குழி அடுத்த மேலவளம்பேட்டையில், மருத்துவம் படிக்காத போலி மருத்துவர் ஒருவர், அவரது வீட்டில் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்த காஞ்சிபுரம் திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதனை அடுத்து, நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் தலைமையில், மேலவளம் பேட்டையில் உள்ள கிளினிக்கில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மூதாட்டி ஒருவருக்கு கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் (50) என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், மேலவளம்பேட்டையை சேர்ந்த பிரகாஷ். இவர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிந்தது. மேலும், மருத்துவம் படிக்காமல், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் மற்றும் கருங்குழி பகுதியில் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் விசாரணையில் தெரிந்தது. இதனை அடுத்து, மாவட்ட மருத்துவ ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.