நாய்கள் கடித்து குதறிய பெண் மயில் உயிருடன் மீட்பு
மாமல்லபுரம், செப். 3: மாமல்லபுரத்தில் இருந்து கொக்கிலமேடு செல்லும் கல்பாக்கம் சாலையையொட்டி தனியார் ரிசார்ட் உள்ளது. இந்த ரிசார்ட்டின் நுழைவாயில் பகுதியில் நேற்று மாலை இரை தேடி வந்த பெண் மயில் ஒன்றை அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறின. பலத்த காயங்களுடன் நாய்களிடமிருந்து தப்பிய பெண் மயில் ரிசார்ட்டின் பாதுகாப்பு கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. பெண் மயில் கத்தும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ரிசார்ட் பணியாளர்கள் ஓடி வந்து, அங்கு சுற்றித் திரிந்த நாய்களை விரட்டினர். மேலும், மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் வீரர்கள் விரைந்து வந்து, பாதுகாப்பு வேலியில் சிக்கிய பெண் மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், தீயணைப்பு அதிகாரிகள் பெண் மயிலை திருக்கழுக்குன்றம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.