திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
குன்றத்தூர், டிச.1: திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்றபோது பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை மணலி, மாத்தூர், 36வது தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (50). இவர், தனது மகன் யூசுப் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்வதற்காக நேற்று தனது உறவினர்கள் 18 பேருடன் மணலியில் இருந்து பேருந்து ஒன்றில் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்தை மணலியைச் சேர்ந்த கணேஷ் (37) என்பவர் ஓட்டினார். பேருந்து தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக முன் பக்க டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால், பேருந்தில் இருந்த சுலேகா (25), யூசுப் (35), ஹாஸ்மா (30) உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.