இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி, ஜூலை 14: தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு வழங்கப்பட்ட நிர்வாக மாறுதலை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவிகளின் மாற்றுச்சான்றிதழ் வழங்குவதற்கு பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதுகலை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்குவதற்கு காரணமான முதன்மைக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஐயப்பன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தங்கராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.