கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கொள்ளிடம், ஜூலை 10: கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் கரையோரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து முதற்கட்டமாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் கடந்த 30 ஆம் தேதி வெளியேற்றப்பட்டு அது கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் சென்று கலந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரண்டாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று 58கும் மேற்பட்ட கன அடி நீர் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் மிக வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றின் கரையை ஒட்டி உள்ள தென்னை மரங்கள் சவுக்கு மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்கள் தண்ணீரில் சாய்ந்து வருகின்றன. நேற்று குத்தவக்கரை கிராமத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையோரம் இருந்த தென்னை மரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆற்றின் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.