வெற்றிலை கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரிப்பு
பரமத்திவேலூர், ஜூலை 3: பரமத்திவேலூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள வெற்றிலை கொடிக்காலில், செம்பியன், மாவு பூச்சி தாக்குதல் நோய் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு உள்ளிட்ட மோகனூர் வரையிலான பகுதிகளில், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை பயிரிடுகின்றனர். இப்பகுதியில் வெற்றிலை கொடிகளை நம்பி, ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானோர்
மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலான வெற்றிலை கொடிக்கால்கள் ராஜவாய்க்காலை பிரதான நீர் ஆதாரமாக கொண்டு உள்ளது.
கடந்த சில வருடங்களாக வெங்கரை, பாண்டமங்கலம், போத்தனூர், வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவு நீர், அதிக அளவு ராஜவாய்க்காலில் கலப்பதால் கொடிக்காலில் சாக்கடை கழிவுநீர் கலந்த தண்ணீரை பாய்ச்சுவதால், பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன் கொடிக்காலில் வேலை செய்பவர்களும் பெரும் அளவு பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக பரமத்திவேலூர் பகுதியில் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதால், வெற்றிலை கொடிக்காலில் அதிக அளவு செம்பேன் தாக்குதலும், பரவலாக மாவு பூச்சி தாக்குதலும் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒரு ஏக்கர் வெற்றிலை கொடிக்கானலுக்கு, சுமார் ரூ.5ஆயிரம் வரை மருந்துகளை தெளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உரிய விலை கிடைக்காததால் வெற்றிலைகள் பறிக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.