சாலையோர வனப்பகுதியில்
சத்தியமங்கலம், ஜுலை 2: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் வனப்பகுதி சாலையில் செல்லும்போது பாலித்தீன் காகிதங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சாலை ஓர வனப்பகுதியில் வீசுகின்றனர்.
யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் வீசப்படும் பாலிதீன் காகிதங்களை உண்ணுவதால் அவற்றிற்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் கண்ணாடி பாட்டில்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மிதிப்பதால் காலில் காயம் ஏற்படுகிறது. வனப்பகுதி சாலையில் செல்வோர் பாலிதீன் காகிதங்கள் மற்றும் பாட்டில்களை வீசக்கூடாது என வனத்துறையினரும் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பண்ணாரி அருகே புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து திம்பம் மலை உச்சி வரை சாலையின் இருபுறமும் பாலித்தீன் காகிதங்கள் மற்றும் பாட்டில்களை சேகரிக்கும் பணி வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை சேகரித்தனர். வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி பாலித்தீன் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.