கூடுதல் வரதட்சணையாக ரூ.1 கோடி கேட்டு கணவர் சித்ரவதை: போலீசில் மனைவி புகார்
அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 25 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது: எனக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (28) என்பவருடன், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர், எலக்ட்ரீஷியன் கடை நடத்தி வருகிறார். திருமணத்தின் போது, வரதட்சணையாக 60 சவரன் நகைகள், சீர்வரிசை பொருட்களை எனது பெற்றோர் கொடுத்தனர்.
இந்நிலையில், கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை கேட்டு எனது கணவர், என்னை சித்ரவதை செய்தார். இதனால் கடந்த 6 மாதமாக அவரை பிரிந்து வசித்து வருகிறேன். எனவே, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என கூறியிருந்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.