நாய்களை கட்டிப்போட்டு வளர்க்க கூறிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீடு சூறை
திண்டிவனம், மே 16: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (65). காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மனைவி மங்கையர்கரசி (50) மற்றும் மகன் நவீன்குமார் (32) ஆகியோர் தாங்கள் வளர்த்து வளரும் நாய்களை அவிழ்த்து விட்டதாகவும், நாய்கள் நேரடியாக ஓடி வந்து தேவராஜின் பேரக்குழந்தைகளை கடிக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது குழந்தைகளை காப்பாற்றிய தேவராஜ் நாய்களை கட்டிப்போடும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கிஷோர்குமார், பிரவீன்குமார் மற்றும் நண்பர்களான உதயகுமார் மகன் அருண்குமார் (28), ஜக்காம்பேட்டை ரமேஷ் ஆகியோர் தேவராஜின் வீட்டை சூறையாடியதுடன், தேவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தேவராஜ் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து நவீன்குமாரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதேபோல் மங்கையர்கரசி கொடுத்த புகாரின் பேரில் தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.