கனமழைக்கு மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
பந்தலூர், ஜூலை 23: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பந்தலூர் அருகே அம்பலமூலா சந்தனசிரா பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி லட்சுமி என்பவரது வீட்டின் அருகே இருந்த மரம் விழுந்து வீடு சேதமானது. இதேபோல், பந்தலூர் கூவமூலா ஆதிவாசி காலனியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி குப்பி மாதன் என்பவரது வீட்டின் மேல் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
சேதம் குறித்து பந்தலூர் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8,000 நிவாரண உதவித்தொகை வழங்கினர். நேற்று முன்தினம் பந்தலூரில் 27 மி.மீ மழையும், சேரம்பாடியில் 37 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.