சூறைக்காற்றுடன் பலத்த மழை
தேன்கனிக்கோட்டை, ஜூலை 14: தேன்கனிக்கோட்டை அருகே, பாலதோட்டனப்பள்ளி பகுதியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி தாலுகாவில் மானாவரி பயிர்களான ராகி, நிலக்கடலை, எள், சாமை, துவரை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த மே மாதம் முழுவதும் கேடை மழை பெய்ததால் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் சீதோஷ்ண நிலை மாறியது. மேலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் முன்பே மே மாதத்தில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்சியுடன் உழவு பணிகளை மேற்கொண்டனர். இந்த மழையை பயன்படுத்தி எள், துவரை விதைத்தனர்.
இந்நிலையில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை கடந்த ஒன்றரை மாதமாக தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதியில் மழை பெய்யாததால் எள், துவரை பயிர்கள் கருகி வருகின்றன.
மேலும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து தென்மேற்கு மழையை எதிர்நோக்கி, சில பகுதிகளில் நிலக்கடலை விதைத்து விவசாயிகள் காத்து கிடந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில் பாலதோட்டனப்பள்ளி, காரண்டப்பள்ளி, அகலக்கோட்டை, கச்சுவாடி, குண்டாலம், ஜவளகிரி வனப்பகுதியையொட்டி பலத்த மழை பெய்தது. இதனால் நிலக்கடலை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.