குடமுருட்டியில் குருபூஜை விழா
கமுதி, ஜூலை 18: கமுதி அருகே குடமுருட்டி சாது சுவாமிகள் 34ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. கமுதி அடுத்த அபிராமம் குடமுருட்டியில் ஸ்ரீமத் சாது சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ளது. கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலானோர் இந்த சாது சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோயிலில் இருந்து துளசி மாலை அணிந்து விரதமிருந்து, சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜீவசமாதி திருக்கோயில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் உதயக்குமார், கோயில் அறங்காவலர் முருகன், கமுதி வட்டாட்சியர் காதர்முகைதீன் ஆகியோர் முன்னிலையில், சாது சுவாமிகளின் படத்திற்கு மாலை அணிவித்து, அங்குள்ள சிவலிங்கத்திற்கு 16 வகையான அபிஷேகம், ஆராதனை, குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்புராயலு, குருசாமி ராமதாஸ் , ஊராட்சி தலைவர் காவடி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.