மதுராந்தகம் அருகே பேருந்து தகரம் உரசியதில் பாட்டி, பேரன் படுகாயம்: பஸ்சை சிறைபிடித்து சாலைமறியல்
மதுராந்தகம், பிப். 5: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மருவளம் பகுதியில் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி நேற்று அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மருவளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டியான ராஜேஸ்வரி மற்றும் அவரது பேரன் சச்சின் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை சச்சின் ஓட்டிச் சென்றுள்ளார்.
எதிரில் திருப்பத்தில் பேருந்து சென்றபோது ஓட்டுநர் பக்கம் தகடு ஒன்று சேதமடைந்து தொங்கிய நிலையில் இருந்துள்ளது. அந்த தகடு மூதாட்டி ராஜேஸ்வரி மற்றும் சச்சின் உடம்பில் உரசியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், பேருந்து பராமரிக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த சித்தாமூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.