தஞ்சாவூர் அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது
தஞ்சாவூர், செப். 14: தஞ்சாவூர் அருகே சாலையில் ஆட்டோ குறுக்கே சென்றதால் அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. தஞ்சாவூர் பூண்டி மாதா கோயிலில் இருந்து அரசு பஸ் ஒன்று 50 பயணிகளை ஏற்றி கொண்டு வேளாங்கண்ணி நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உடையார் கோவில் பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆட்டோ ஒன்று சாலையின் குறுக்கே சென்றுள்ளது. இதனால் ஆட்டோவில் மோதாமல் இருப்பதற்காக பஸ்சை, டிரைவர் திருப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அரசு பஸ் சாலை ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா (28), வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சினேகா (21) ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் சுதாரித்து பஸ்சை ஓட்டியதால் பெரிய அளவில் விபத்து இன்றி பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.