ரூ.46 லட்சத்திற்கு ஆடு, கோழி விற்பனை
சேந்தமங்கலம், ஜூலை 22: எருமப்பட்டி அடுத்த பவித்திரம், செவ்வந்திப்பட்டி சந்தைகளில் ரூ.46 லட்சத்திற்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை இரு ஆட்டுச்சந்தைகள் நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயம்புத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருகின்றனர். மேலும் சுற்றுவட்ட பகுதியான பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர், கோணங்கிப்பட்டி, முத்துகாப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகிறது.
ஆடி மாதம் கோயில் விழாக்கள் நடைபெறுவதால், நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் வளர்ப்பு ஆடுகள், கிடாக்கள், நாட்டுக்கோழிகள் வரத்து அதிகரித்தது. சுமார் 1600க்கும் மேற்பட்ட ஆடுகள், கிடாக்கள் விற்பனைக்கு வந்திருந்தது. இறைச்சி ஆடுகளை வாங்க வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் வந்திருந்தனர். இதனால், ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. சுற்றுப்புற பகுதியிலிருந்து 600க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். கோழிகள் ரூ.1 லட்சத்திற்கு விற்பனையானது. ஆக மொத்தம் ரூ.46 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.