மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம் வனத்துறை நடவடிக்கை தண்டராம்பட்டு அருகே
தண்டராம்பட்டு, ஜூன் 30: தண்டராம்பட்டு அருகே மான் கறி சமைத்த 3 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் தண்ணீர்பந்தல் பகுதியில் சிலர் மானை வேட்டையாடி சமைத்து கொண்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை வன அலுவலர் ரவி, வனவர் குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில், தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை கொன்று மாட்டுக்கொட்டகையில் வைத்து சமைத்து கொண்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த மோகன்(40), விஜய்(25), கண்ணன்(56) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், மான் கறியை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் சாத்தனூர் அணை வன அலுவலகத்திற்கு அழைத்து சென்று தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், மான் வேட்டையாடியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.