முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில்
காரைக்குடி, ஜூலை 3: காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் வகுப்பு துவக்க விழா நடந்தது. தாவரவியல் துறைத் தலைவர் கோமளவல்லி வரவேற்றார். கல்லூரி முதல்வர் நிலோபர்பேகம் தலைமை வகித்தார். டிஎஸ்பி பார்த்திபன் வகுப்புகளை துவக்கி வைத்து பேசுகையில், `மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டால் உங்களின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அவசியம். நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் உள்ளது. படிப்பு மட்டும் தான் உங்களின் வேலை. நீங்கள் நினைத்தால் சாதனையாளராக முடியும். விடா முயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்றார். வரலாற்றுத்துறை பேராசிரியர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பாரதி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். புவி அமைப்பியல் துறைத் தலைவர் உதயகணேஷ் நன்றி கூறினார்.