தொழிலாளி கொலை வழக்கில் பட்டாசு ஆலை வாட்ச்மேன் கைது
விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான அழகு மலையான் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் முத்துலாபுரத்தை சேர்ந்த பழனிமுருகன்(52) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பழனி முருகனுக்கு இரு மனைவிகள், 3 குழந்தைகள் உள்ளனர். பழனிமுருகன் ஆலையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.
மறுநாள் காலை வேலைக்கு வந்தவர்கள் பழனிமுருகன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை கைப்பற்றி தலைமறைவாக இருந்து பட்டாசு ஆலை வாட்ச்மேன் நந்தீஸ்வரனை(60) தேடி வந்தனர். ஓ.கோவில்பட்டியில் பதுங்கி இருந்த நந்தீஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், பட்டாசு ஆலையில் பழனிமுருகன் வாட்ச்மேன் மற்றும் தொழிலாளியாக ஆலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
புதிய வாட்ச்மேனாக நந்தீஸ்வரன் (60) வரவால், பழனிமுருகனுக்கு சம்பளம் குறைந்துள்ளது. இதனால் இருவரிடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் 20ம் தேதி இரவு மதுபோதையில் வந்த பழனிமுருகனிடம், நந்தீஸ்வரன், தனக்கு மதுவாங்கி வரவில்லையா என கேட்டதால் அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் நந்தீஸ்வரன் இரும்பு கம்பியால் பழனிமுருகனை தாக்கி கொலை செய்துள்ளார் என தெரிவித்தனர்.