வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் கருகின
சிவகிரி, ஜூலை 14: வாசுதேவநல்லூர் அருகே தொழுவத்தில் தீ பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி இறந்தன. மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையணையில் மாரியப்பன் மகன் பிள்ளையார்(63) வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தொழுவம் அமைத்து அதில் ஆடு, கோழி, நாய்கள் வளர்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு ஆட்டுத் தொழுவத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் பயங்கர காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் தொழுவத்தில் இருந்த 12 ஆடுகள், 20 கோழிகள், ஒரு நாய் ஆகியவை தீயில் கருகி இறந்தன.
பிள்ளையாரிடம் செல்போன் இல்லாததால் தீப்பிடித்தவுடன் தீயணைப்புத் துறையினருக்கோ, மற்றவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதனால் அவரே தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.