விழுப்புரம் நகைக்கடையில் தீ விபத்து
விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் காமராஜர் சாலையில் 50க்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளன. நேற்று பிற்பகல் ஒரு நகை கடையில் முதல் தளத்தில் கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் கடையில் சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.