சின்னமனூரில் மாடு கட்டி, ஏரு பூட்டி பாரம்பரிய முறையில் பரம்படிக்கும் விவசாயிகள்
சின்னமனூர், ஜூலை 9: சின்னமனூர் பகுதியில், முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சில விவசாயிகள் மாடு கட்டி, ஏரு பூட்டி பாரம்பரிய முறையில் பரம்படிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியாறு அணையில் இருந்து, வழக்கம்போல் கடந்த ஜூன் 1ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வரை தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக சுமார் 14,700 ஏக்கர் பரப்பில் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முல்லைப் பெரியாறு பாசன நீரைப் பயன்படுத்தி வருடம் இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும், பாசன வசதி கிடைத்துள்ளதாலும், இதமான காலநிலை நிலவுவதாலும் சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.