வேப்பனஹள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை
வேப்பனஹள்ளி, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். தற்போதைய பட்டத்தில் மழை பெய்து, நிலக்கடலை விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு பருவமழை தற்போது வரை பெய்யாததால், நிலக்கடலை விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சீசன் தொடக்கத்தில் பெய்த மழையில், தற்போது வரை 20 சதவீதம் மட்டுமே நிலக்கடலை விதைக்கப்பட்டுள்ளது. இதுவும் போதிய மழை இல்லாததால் பயிர்கள் முளைக்காமல் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்வது தாமதமானால் விதைக்கப்பட்டுள்ள 20 சதவீதம் பயிர்களும் அழியும் அபாயம் உள்ளது. எனவே, பருவமழை பொய்த்தால் இம்முறை நிலக்கடலை பயிரிடும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு, நிலக்கடலை உற்பத்தி வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.