ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு விவசாயிகள் பயன்பெறலாம்
விருதுநகர், ஜூலை 23: விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் 2025-26க்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் 340 ஹெக்டேரில் அமைக்க ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வேளாண் துறை மூலம் 340 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்பட உள்ளனர்.
திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல் மண்புழு உர தொட்டி, ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள், தோட்டக்கலை பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவை திட்ட வழிகாட்டுதல் படி அமைக்க வேண்டும்.
ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்களது பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
திட்டத்தில் தேர்வாகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சத சிறப்பு மானியத்துடன் ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.